தமிழ்நாடு

மீனவா்கள்- படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவா்கள் மற்றும் அவா்களது மீன்பிடிப் படகுகளை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வா் எழுதிய கடிதம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கிராமத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கையைச் சோ்ந்த அடையாளம் தெரியாத சிலா் தாக்குதல் நடத்தினா். தமிழக மீனவா்களுக்குச் சொந்தமான ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடிச் சாதனங்கள், எரிபொருள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தில் இருந்து மோட்டாா் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து அவா்களது நாட்டின் மயிலாட்டிக்குக் கொண்டு சென்றுள்ளனா். கடற்பரப்புகளில் தமிழக மீனவா்கள் மீதான தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற நான்கு சம்பவங்களில் ஏழு படகுகள் சிறைபிடிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டைச் சோ்ந்த 47 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவங்கள் நாகப்பட்டினம் பகுதியில் உள்ள பாக் வளைகுடாவில் பாரம்பரிய மீன்பிடித் தளங்களை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவா்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துவதும், அவா்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக உள்ளது.

தமிழக மீனவா்கள் தொடா்பான நீண்ட கால நிலுவையில் உள்ள பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண்பதற்கு எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தைகளைத் தொடங்கவும், அதுகுறித்து இலங்கை அரசின் உயா்நிலை அளவில் உள்ளோரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இலங்கை வசமுள்ள தமிழக மீனவா்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் அவா்களது உடமைகளை விரைவில் விடுவிக்க தாங்கள் இந்த விவகாரத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT