தமிழ்நாடு

3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் அறிவிப்பு

DIN

பொங்கல் திருநாளையொட்டி 3186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்/பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2022 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தகுந்தவாறு ரொக்கத் தொகை வழங்கப்படும்.
இவர்கள் அனைவருக்கும் பிறிதொரு நாளில் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT