தமிழ்நாடு

கைவிடப்படும் ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம்: நிலங்கள் திரும்ப ஒப்படைப்பு

DIN

அரியலூர்: கைவிடப்படுகிறது ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம். திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களிடம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு 24 ஆண்டுகளாகியும் திட்டம் தொடங்கப்படாததால், நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பி தர தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதி, பூமிக்கடியில் ஏராளமான அளவில் பழுப்பு நிலக்கரி இருப்பது ஆய்வில் தெரியவந்ததைத் தொடர்ந்து சுரங்கங்கள் அமைக்கவும், அதன் அருகிலேயே தலா 800 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 1992 ஆம் ஆண்டு ஜயங்கொண்டத்தைச் சுற்றியுள்ள மேலூர், புதுகுடி, கீழகுடியிருப்பு, கொம்மேடு, மருக்காலங்குறிச்சி, வடுகர்பாளையம், காட்டாத்தூர், குளத்தூர், தேவனூர், இலையூர், வாரியங்காவல், கோரியம்பட்டி, சூரியமணல், உடையார்பாளையம்,கூவத்தூர், கல்லாத்தூர், தண்டலை, செங்குந்தபுரம், இளமங்கலம், செட்டிகுழிபள்ளம், கரைமேடு,பெரியவளையம், தேவிமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில், 22 ஆயிரம் விவசாயிகளிடம்,10 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டது.

இதற்கு விலையாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, ஜயங்கொண்டத்தில் இதற்கென ஏற்படுத்தப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்களில் 11,489 வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால், நிலமளித்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பழுப்பு நிலக்கரித் திட்டத்தை தொடங்க வேண்டும், இல்லையெனில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி நிலம் அளித்த விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம், சிங்கூரில் டாடா நிறுவனத்துக்கு கையகப்படுத்திய நிலத்தில் திட்டம் தொடங்கப்படாததால் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பின்பற்றி ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கே திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மேலூர் மற்றும் இலையூர்(மேற்கு)தவிர மற்ற 11 கிராமங்களில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அதன் உரிமையாளர்கள் அவர்களது வாரிசுதாரர்கள் வசம் ஒப்படைக்கவும், கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மீதோ வழக்கு தொடரக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கையெழுத்து பெற்று நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், மேலூர்,இலையூர் (மேற்கு) கிராமங்களில் நிலம் கொடுத்த மக்கள், கூடுதல் இழப்பீடு தொகை கொடுத்தால் மட்டுமே நிலங்களை திரும்ப பெறவோம் என கூறியதால் நிலங்கள் திரும்ப வழங்குவது நிலுவையில் உள்ளது. இதனிடையே நிலங்களை திரும்ப ஒப்படைக்கப்படுவதை அறிந்த 11 கிராமங்களைச் சேர்ந்த நிலம் கொடுத்த விவசாயிகள், பட்டாசு வெடித்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர். நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுவதால் பழுப்பு நிலக்கரி திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT