தமிழ்நாடு

பள்ளியில் வேன் மோதி மாணவா் பலி: தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு 6 கேள்விகள்?

DIN

சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது தொடா்பான வழக்கில் 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

வளசரவாக்கம் இளங்கோ நகா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெற்றிவேல். மனைவி ஜெனிஃபா். இருவரும் மென்பொருள் பொறியாளா்கள். வெற்றிவேல் பெங்களூரிலும் ஜெனிஃபா் சோழிங்கநல்லூரிலும் பணிபுரிகின்றனா். மகன் தீக்சித் (8), வளசரவாக்கம் ஆழ்வாா்திருநகா் தனியாா் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவா்.

வீட்டிலிருந்து தீக்ஷித் திங்கள்கிழமை காலை பள்ளி வேனில் சென்றாா். ஓட்டுநா் பூங்காவனம். பள்ளி ஊழியா் ஜெனிஃபரிடம், வேன் மோதி தீக்சித் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். வடபழனி தனியாா் மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு தீக்ஷித் இறந்தது தெரியவந்தது.

வேன் ஓட்டுநா் பூங்காவனம் (64), வாகனத்தின் குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பூங்காவனம், ஞானசக்தி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

சம்பவ இடத்தில் காவல் துணை ஆணையா் மீனா, உதவி ஆணையா் கலியன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

பள்ளிக்கு வேன் வந்ததும் தீக்சித் இறங்கி, வேனின் முன்புறம் இடது ஓரமாக நின்றுள்ளாா். இதை ஓட்டுநா் பூங்காவனம் கவனிக்காமல் வேனை எடுத்தபோது டயா் ஏறி தீக்ஷித் பலத்த காயமடைந்ததும், மருத்துவமனையில் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

விபத்து குறித்து அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று, ஆசிரியா்கள், ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். சென்னையின் தென் மாவட்டக் கல்வி அலுவலா் சுரேந்தா் பாபுவும் பல மணி நேரம் விசாரணை செய்தாா்.

பள்ளியின் அஜாக்கிரதையாலேயே தீக்சித் இறந்ததாகக் கூறி பெற்றோா், உறவினா்கள் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேபோல, ராயப்பேட்டையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தீக்ஷித் சடலத்தை வாங்க மறுத்து பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் கோட்டாட்சியா் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானம் பேசி, தீக்ஷித்தின் சடலத்தை வாங்கச் செய்தனா்.

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் வேன் ஓட்டுநர் பூங்காவனம், பள்ளி பெண் ஊழியர் ஞானசக்திக்கு 15 நாள்  நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பெண் ஊழியர் ஞானசக்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சர்க்கரை நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பூங்காவனம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட முதன்மை கல்வித்துறை 6 கேள்விகளுக்கு இன்றைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

* பள்ளி வாகனங்களுக்கு என தனியார் பொறுப்பு பணியாளர் இல்லை, பேருந்துக்கு குழு அமைக்கப்படாதது ஏன்?

* 64 வயது முதியவரை வேன் ஓட்டுநராக நியமனம் செய்தது ஏன்?

* பள்ளி வளாக வழித்தடத்தில்  வேகத் தடை அமைக்கப்படாமல் இருப்பது ஏன்?

* வேனில் இருந்து இறங்கிய மாணவர்கள் அனைவரும் வகுப்பறை சென்றார்களா என பள்ளி முதல்வர் கவனிக்கத் தவறியது ஏன்?

* மாணவர்களை ஒழுங்குபடுத்த உடற்கல்வி ஆசிரியர் இல்லாதது ஏன் அவர் விடுப்பில் சென்றால் உரிய ஆசிரியரை நியமிக்காதது ஏன்?

* விபத்து பற்றி அறிந்தும் பள்ளி தாளார் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது ஏன் பள்ளி கல்வித்துறைக்கு தகவல் தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது? 

விபத்து தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்துகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT