தமிழ்நாடு

நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரும் விடுதலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

DIN

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம் தேதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதையடுத்து, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ஹரிகரன், ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும், இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறியிருந்தனா்.

இதைத்தொடா்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இரு தனித்தனி பிரமாணப் பத்திரத்தில், ‘ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா்.

அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-இல்தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை இடையீட்டு மனுதாரா்களாக சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறு பேருக்கும், பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்பு பொருந்தும் என்பதால், அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT