தமிழ்நாடு

இருளில் மூழ்கிய சென்னை! பெருந்துயரில் மக்கள்!

மிக்ஜம் புயலால் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

DIN

மிக்ஜம் புயலால் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பல இடங்களில் நேற்று (டிச. 3) இரவுமுதலே மின்சாரம் இல்லாததால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

பள்ளமான பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசிய பொருள்களுக்காக பொதுமக்கள் வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீரில் மூழ்கின. பல வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சாரம் இல்லாததால், தொட்டிகளில் நீரேற்றம் செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். இதனால், கழிப்பறை போன்றவற்றிற்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் தங்களின் செல்போன்களின் சார்ஜ் போட முடியாத நிலை உள்ளது. பல செல்போன் கோபுரங்கள் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றுக்கான எரிபொருள் தீர்ந்ததால், செல்போன் கோபுரங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனைகளிலும் போதிய அளவு மின்சாரம் இல்லாததால், உள்நோயாளிகள் புறநோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோன்று மின்சாரம் இல்லாததால் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகளும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். 

தொடர் மழை பெய்துவரும் நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். இருந்தாலும் அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காதவகையில் இருக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT