சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தில் ரயிலில் அடிபட்டு இரு மயில்கள் பலியான சம்பவம், இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளிலும் இரைத்தேடி கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
மயில்களை, தமிழ் கடவுளான முருகனின் வாகனமாக கருதுவதாலும், நமது தேசிய பறவை என்பதாலும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் நிலையிலும், விவசாயிகளும், பொதுமக்களும் மயில்களை துன்புறுத்தாமல் பாதுகாத்து வருகின்றனர்.
இதுவே வாழப்பாடி பகுதியில் மயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில், கோதுமலை வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரைத் தேடி சென்ற ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மயில் ஆகிய இரண்டும், மயில் கூட்டத்திலிருந்து பிரிந்து, சேலம் விருத்தாசலம் ரயில் பாதையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியாகின.
இன்று புதன்கிழமை காலை, மயில்கள் ரயில் பாதை அருகே இறந்து கிடந்ததை கண்டு இப்பகுதி மக்கள் சோகமடைந்தனர்.
இதுகுறித்து வாழப்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.