தமிழ்நாடு

அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்பு

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(நவ. 15) காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலரும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சங்கரய்யாவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 3 மணிக்கு தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது. நாளை(நவ. 16) இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 

தகைசால் தமிழர் – முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.

மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கையும் தியாகமும் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். 

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்கச் செயலாளராகப் போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சங்கரய்யா. அவரது தேசியம் சார்ந்த செயல்பாடுகளால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு படிப்பைத் துறந்தவர். இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னர்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! விருதோடு கிடைத்த பெருந்தொகையைக்கூட கரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்த தோழர் சங்கரய்யாவின் மாண்பால் நெகிழ்ந்து போனேன்.

தோழர் சங்கரய்யா ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்து நினைவுகூரத்தக்க பல பணிகளை ஆற்றியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உற்ற நண்பராக விளங்கிய சங்கரய்யா,  கருணாநிதியின் இறுதிப்பயணத்தைக் கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பைப் பறைசாற்றியது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலுமாக இருந்து அவர் நடத்திய போராட்டங்களும், தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் முதலிய பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும். 

பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத – குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன்.

தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா. சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தோழர் சங்கரய்யாவின் மறைவு எப்போதும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது அனுபவமும் வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என எண்ணியிருந்த எனக்கு அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.

சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT