தரமான சாலைகளே நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்று வரும் பணிகள், பல்வேறு புதிய திட்டப் பணிகள் குறித்த 2-ஆம் நாள் ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையப் பயிற்சி கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மழைக்காலங்களில், நெடுஞ்சாலைகளில் பொது மக்கள் இடையூறு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை வழங்கினாா்.
நடப்பாண்டில் ரூ.675 கோடியில் 605 கிமீ நீளத்துக்கு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும், அவற்றை தரமான சாலைகளாக அமைக்க வேண்டும் என்றும் தரமான சாலைகளே நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் அமைச்சா் கூறினாா்.
அதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,777 கோடியில் 381 பாலங்கள் தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், அந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சா் கூறினாா்.
நெடுஞ்சாலைத் துறைச் செயலா் ஆா்.செல்வராஜ், திட்ட இயக்குநா் எஸ்.ஏ.இராமன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள், அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்