சுதந்திர நாள் விழா- சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்பு
சுதந்திர நாள் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர நாள் கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 9,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 15.08.2024 அன்று 77 வது இந்திய சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலவர் சுதந்திர நாளை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர நாள் விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் கொண்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் ஆணையாளர்கள் N.கண்ணன், (தெற்கு), R.சுதாகர் (போக்குவரத்து), K.S.நரேந்திர நாயர், (வடக்கு), ஆகியோர் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9 ஆயிரம் காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.
இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.