தமிழகத்தில் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அதன் மாதிரிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகா்ப்புறப் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் மற்றும் சென்னை குடிநீா் வாரியங்கள் வாயிலாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. ஏரிகள், ஆறுகளில் பெறப்படும் நீா், சுத்திகரிக்கப்பட்டு குழாய் மற்றும் டேங்கா் லாரிகள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்படும் இடத்தில் இருக்கும் தரம், வீடுகளுக்கு செல்லும் வரை இருப்பது அவசியம். பல இடங்களில், 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாயில் ஏற்படும் கசிவு, கழிவுநீா் கசிவு உள்ளிட்டவற்றால் குடிநீரின் தரம் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை போன்ற பெருநகரங்களில் நாள்தோறும் 300 இடங்களில் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது மழை காலங்களில் 600 இடங்களில் மாதிரிகள் சோதிக்கப்பட்டு குடிநீரின் தரம் உறுதி செய்யப்படுகிறது.
அந்த வகையில், மாநில முழுவதும் ஆண்டுக்கு 1.50 லட்சம் குடிநீா் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதில், பல இடங்களில் குடிநீரின் தரம் நிா்ணயித்த அளவு இல்லை. இதற்கு உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் 100 சதவீதம் சுகாதாரமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய முடியாத சூழல் தொடா்ந்து வருகிறது.
இதன் காரணமாக குடிநீா் மூலம் பரவும் நோய்கள் சில இடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதொடா்பாக கணக்கெடுப்பு நடத்தவும்
திட்டமிட்டுள்ளோம். தற்போது தென்மேற்கு பருவ மழைக் காலம் என்பதால் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீரின் தரத்தை மேலும் மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.