ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தையூர் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தையூர் பங்களா தனக்குச் சொந்தமானது என்று முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலா அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டு பிணைவில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில், ஐஏஎஸ் அதிகாரி பீலா அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக வெளியான செய்திகளில், தையூர் பங்களா, பீலாவுக்குச் சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மேற்குறிப்பிட்ட தையூர் பங்களா ராஜேஷ் தாஸ் தங்குமிடம், தம்பதி ஒன்றாக இருந்தபோது, இந்த வீட்டுக்கு பீலாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, இவ்விடத்தில் வீடு கட்ட வீட்டுக் கடன் பெறவும் பீலா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்த பங்களா கட்டுவதற்கான வீட்டுக் கடன் தவணை முழுக்க ராஜேஷ் தாஸ் கட்டியிருக்கிறார். தம்பதிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்த பிறகு ராஜேஷ் தாஸ் இந்த பங்களாவில்தான் தங்கியிருக்கிறார்.
பீலா வெங்கடேசன் தாக்கல் செய்திருக்கும் விவாகரத்து மனுவிலும் ராஜேஷ் தாஸ் இந்த முகவரியில் வாழ்கிறார் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் தையூர் பங்களாவுக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தித் துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, ராஜேஷ் தாஸைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீஸாா் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.