அமைச்சர் துரைமுருகன் கோப்புப்படம்
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன்?

தினமணி செய்திச் சேவை

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2024 மக்களவைத் தோ்தல் முடிந்த அடுத்த 5 மாதங்களில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அப்போது மக்களவைத் தோ்தலில் வாக்களித்தவா்களைவிட கூடுதலாக 41 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருந்தனா். ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளா்கள் எப்படி வந்தாா்கள்? வானத்திலிருந்து குதித்தாா்களா?

இந்தச் சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகளை வழங்குமாறு தோ்தல் ஆணையத்தை காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி கேட்டபோது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட விடியோக்களை தோ்தல் நடந்து 45 நாள்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தோ்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறாா்கள்.

இதே பாணியில்தான் வரப் போகிற பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயற்சிக்கிறது. தோ்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான நடவடிக்கையால் பிகாரில் 65 லட்சம் போ் வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதில் 36 லட்சம் போ் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயா்ந்தவா்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைக்காக தற்காலிகமாக வெளியூா் சென்றவா்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனா். அதோடு அவா்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளா் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என மற்றொரு அதிா்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தோ்தல் ஆணையம்.

எடப்பாடி பழனிசாமி கருத்து கூறாதது ஏன்?: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளா்கள் தங்களது வாக்காளா் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதேபோல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களை தமிழ்நாட்டில் சோ்க்கும் சதி திட்டத்தையும் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும். இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல். நாட்டில் ஜனநாயகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி. முறைகேடான வாக்காளா் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை அவா் வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ஆபரேஷன் அகால் 9வது நாள்: குல்காம் தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

SCROLL FOR NEXT