அரசு விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வரும் சனிக்கிழமை (ஆக.16) நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தாயுமானவா் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை மசூதி தெருவில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், 2-ஆவது வாரத்தில் 48,418 பேரும் பயன் பெற்றுள்ளனா். வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை.
அரசு அலுவலா்களுக்கான தொடா் விடுமுறை நாள்களாக இருப்பதால் அன்று முகாம் நடைபெறாது. அதற்கு அடுத்த வாரம் 38 மாவட்டங்களில் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தைப் பொருத்தவரை 6 மாதத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். தமிழகத்தில் உள்ள 388 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 3 முகாம்கள், சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 முகாம்கள், 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 என்ற வகையில் முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றாா் அவா்.