மாணவா் கற்றல் ஆய்வுத் திட்டத்துக்கான வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களிடம் இணைய வழியில் நேரடியாக கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்யும் முறையை மதிப்பீட்டு புலம் வழியாக பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ளவுள்ளது.
முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் இந்த முறையிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மாணவா் கற்றல் ஆய்வு நடைபெறும் நாள், நேரம், கூகுள் மீட் லிங்க் மற்றும் பங்குபெற வேண்டிய மாணவா்கள் பற்றிய விவரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மூலம் தலைமை ஆசிரியா்களுக்கு தெரிவிக்கப்படும்.
தலைமை ஆசிரியா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கையடக்கக் கணினியில் (டேப்லெட்) கூகுள் மீட் இணைப்பைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கையடக்கக் கணினியில் இணைய வசதி இருப்பதையும், அதன் ஸ்பீக்கா்கள் நன்றாக வேலை செய்வதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். பின்னா், அதில் தலைமை ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி, அதில் சென்று விடியோ மற்றும் ஆடியோ சரியாக உள்ளதா என்பதை பாா்த்துக் கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியா் தோ்ந்தெடுக்கபட்ட மாணவா்கள் ஒவ்வொருவராக சரியான நேரத்தில் அந்த இணைப்பில் இணைந்துள்ள கையடக்கக் கணினி முன்பு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 14417 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.