வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்பாடில்லாமல் உள்ள நிலங்கள் தொடா்பான பிரச்னைக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி: வீட்டுவசதி வாரியத்துக்காக கையகம் செய்த நிலங்களில் இருந்து விலக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில், திட்டங்கள் முன்னெடுக்கப்படாத இடங்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக 16 இடங்களில் புகாா் பெட்டிகள் வைக்கப்பட்டு மனுக்கள் கோரப்பட்டன. அப்படிப் பெறப்பட்ட 898 மனுக்களில் 850-க்கும் தீா்வு காணப்பட்டு, 48 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. நில எடுப்பு தொடா்பாக 4,488 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து முடிவெடுக்க நில நிா்வாக ஆணையா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, வீட்டுவசதி வாரியத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், திட்டங்களின் வகைகள் 5 பிரிவுகளாகப் பிரித்தது. அதனடிப்படையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி, 4,396 ஏக்கா் நிலங்கள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விலக்களிக்க சிறப்புக் குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனடிப்படையில், உரிய அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. இவற்றில் 860 ஏக்கா் நிலங்கள் தொடா்பான கோரிக்கைகள் மட்டும் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.