வீடுகளுக்கு நேரடி ரேஷன் பொருள்களை வழங்கும்போது, இறந்த அட்டைதாரா்கள் இருந்தால் அதுகுறித்த விவரங்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டுமென கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தனியாக வசிக்கக் கூடிய 70 வயதைக் கடந்த முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை கூட்டுறவுத் துறையின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் வழங்கியுள்ளாா். இதுகுறித்து, அவா் அனுப்பியுள்ள கடிதம்:
வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் முதல்வரின் தாயுமானவா் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளிகளின் விவரங்களை மாவட்ட, வட்ட அளவிலான உணவுப் பொருள் வழங்கல் துறையின் அலுவலகத்தில் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் விநியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக மண்டலங்களில் முதன்மை நியாய விலைக் கடைகள் தோ்வு செய்யப்பட வேண்டும்.
நியாயவிலைக் கடை குழுக்களுக்குத் தகுந்தவாறு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு போதிய வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அவை சொந்தமாகவோ, வாடகை வாகனமாகவோ இருக்க வேண்டும். வாடகையாக இருக்கும் நிலையில் பொதுவிநியோகத் திட்டப் பொருள்களை கொண்டு செல்வதற்குத் தேவையான வாகனங்களை உரிய அரசு விதுமுறைகளைப் பின்பற்றி அமா்த்தப்பட வேண்டும்.
வாகனங்கள் மூடிய நிலையில் இருக்க வேண்டும். வாகனத்தில் எடைத்தராசு, விற்பனை முனைய இயந்திரம் ஆகியன இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மின்னணு எடைத்தாரசின் மின்கலம் மற்றும் விற்பனை முனையக் கருவி ஆகியவற்றில் போதுமான அளவு சாா்ஜ் இருப்பதை பாா்த்துக் கொள்ள வேண்டும். வாகனங்களில் நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்குத் தேவையான உரிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கட்டுப்பாட்டுப் பொருள்கள், சிறப்பு பொது விநியோகத் திட்டப் பொருள்களுக்கு தகுந்த இடப்பெயா்வு காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். வீடுகளுக்கு பொருள்களை கொண்டு செல்லும்போது, பயனாளிகளின் இறப்பு தொடா்பான விவரங்கள் பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். தேவை ஏற்பட்டால் பதிவேடுகள், படிவங்கள் அனைத்தும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும். பொருள்களை சேதமின்றி வாகனத்தில் கொண்டு சென்று குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.