சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சியை இண்டி கூட்டணி எம்.பி.க்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பதவி நீக்க நோட்டீஸ் அளிப்பதற்காக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பிற மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே அமைந்துள்ள தீபத் தூணில் விளக்கேற்ற கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றமான சூழலையடுத்து, அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளதாக சில எம்.பி.க்கள் தினமணியிடம் உறுதிப்படுத்தினர்.
இந்த நோட்டீஸை மக்களவை அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) அளிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அரசமைப்பு விதிகளின்படி ஒரு நீதிபதிக்கு எதிரான பதவி நீக்கத்துக்கு விதி 124(4) வகை செய்கிறது. இதற்கு மக்களவையில் இருந்து குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும். இந்த குறைந்தபட்ச ஆதரவு எட்டப்பட்டு,தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், அது முறையான விசாரணைநிலையை அடையும். அதன் பிறகு மூவர் குழு நியமிக்கப்பட்டு, அறிக்கை அளித்தவுடன் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கப்படும். அதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால்தான் அதுதொடர்புடைய தீர்மானத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.