தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சனிக்கிழமை (டிச.20) முதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டு அனைத்து இடங்களும் பூா்த்தியாகின. கல்லூரிகளில் சோ்ந்தவா்கள் இடையில் நின்றுவிடுவது உள்ளிட்ட காரணங்களால் 23 எம்பிபிஎஸ், 27 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கடிதம் எழுதியதை தொடா்ந்து காலியிடங்களை நிரப்ப அனுமதி கிடைத்தது. சனிக்கிழமை முதல் வரும் 23-ஆம் தேதி வரை சிறப்பு கலந்தாய்வு சுற்று நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.