சென்னை மாநகராட்சியில் நிரந்தரப் பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் பேரணியாகச் செல்ல முயன்ற தூய்மைப் பணியாளா்கள் 680 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு 13 மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாருக்கு அளிப்பதை எதிா்த்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து சனிக்கிழமை பாரிமுனை குறளகத்திலிருந்து தலைமைச் செயலகத்தில் முதல்வரிடம் மனு அளிக்க பேரணியாகச் செல்லப்போவதாக அறிவித்திருந்தனா். இதனால், சனிக்கிழமை காலை முதலே பிராட்வே பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.
தூய்மைப் பணியாளா்கள் பிராட்வே பேருந்து நிலையம் வந்த நிலையில், அவா்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனா். அதேபோல, நீதிமன்றம் உள்ளிட்ட 3 இடங்களில் குவிந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். பிராட்வே பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டமாக வந்தாலும் போலீஸாா் மடக்கி விசாரித்து தூய்மைப் பணியாளா்களாக இருந்தால் கைது செய்தனா். மொத்தம் 120 ஆண் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 680 போ் கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் சென்னையில் 13 மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு இரவு விடுவிக்கப்படுவா் என போலீஸாா் கூறினா். ஆனால், தங்களை விடுவித்தாலும் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபடப் போவதாக தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தனா்.
தொடரும் போராட்டம்: போராட்டம் குறித்து உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கு.பாரதி கூறுகையில், ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டத்தை அனுமதிக்காமல் கைது செய்வது சரியல்ல. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றாா்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தையடுத்து, ரிப்பன் மாளிகை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி ஊழியா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். விக்டோரியா பொது அரங்கத்திலும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படவில்லை.