அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேர்மையான விசாரணை தேவை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் நடைபெறும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து புறப்படும் முன்னதாக விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசினார்.
அவர் பேசியதாவது:
“தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு விசிக வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொருத்தவரை கைதாகியிருப்பவரை கடந்து ஒருசிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அரசு நேர்மையான முறையில் புலன் விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக் கூடாது.
சிறையில் வைத்தபடி புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
யார் அந்த சார்? என்ற கேள்விக்கு நேர்மையான விசாரணை செய்து, குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.
போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சில போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக நினைக்கிறேன். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், மாணவியை வல்லுறவு செய்வதற்கு முன்னதாக ஒருவரிடம் தொலைபேசியில் சார் எனக் குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குற்றவாளி தொலைபேசியில் பேசிய சார் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.