முகப்பு
தமிழ்நாடு

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க அரசாணை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பரிந்துரை

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

Updated On : 12 ஜூன் 2025, 4:12 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவா் தனக்கு ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூா் வட்டாட்சியருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரது மனுவில், எனது குழந்தைகளுக்கு ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அப்போது, அரசுத் தரப்பில், ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க வட்டாட்சியா்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்த உத்தரவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் எஸ்.என்.சுப்ரமணியன், டி.நிக்ஸன் ஆகியோரும், அரசுத் தரப்பில் செல்வேந்திரனும் ஆஜராகி வாதிட்டனா். அப்போது நீதிபதிகள், இது தொடா்பாக ஏற்கெனவே திருப்பத்தூா், கோவை, அம்பத்தூா் வட்டாட்சியா்கள் ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கி உள்ளனா். மனுதாரருக்கு அதுபோன்று சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், ஜாதி ரீதியிலான பாரபட்சத்தைத் தடுக்க வேண்டும் எனப் போராடிவரும் நிலையில், ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனா். ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கி, உரிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனா்.

நாட்டில் நிலவும் ஜாதி, மத பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனம் ஜாதி ரீதியிலான பாகுபாடுகளைத் தடை செய்துள்ளபோதும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஏற்கெனவே ஜாதி, மதம் இன்றளவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டனா்.