சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணை மீட்பதற்காக பெண் வீட்டார், அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை கொண்டு கடத்தியுள்ளனர். இதில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ள நிலையில், அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், சிறுவன் கடத்தல் விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் காவல்துறை ஏடிஜிபி ஜெயராமுக்கு தொடர்புள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
பிற்பகல் நடந்த இந்த வழக்கில் விசாரணையில் பூவை ஜெகன்மூர்த்தி நீதிபதியின் முன்பு முன்பு ஆஜரானார்.
அப்போது நீதிபதி, 'கட்டப்பஞ்சாயத்து செய்யவா, மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?' என்று ஜெகன்மூர்த்தியிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், பூவை ஜெகன்மூர்த்தி காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், விசாரணையின்போது கைது செய்யக்கூடாது என உத்தரவிட முடியாது. கைது செய்யப்பட்டால் ஜாமீன் மனு தாக்கல் செய்யட்டும்" என்று கூறியதுடன் இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து காவல்துறை பாதுகாப்பில் வைக்கக்கூறி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிக்க | ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.