மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்.  கோப்புப்படம்
தமிழ்நாடு

மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம்

Din

சென்னை: நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவசியம் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை, கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று 179 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது முதலில் செயல்முறை மருத்துவ மையமாக தொடங்கப்பட்டது. தற்போது தரமான மருத்துவக் கல்வி மற்றும் சிகிச்சைகளை வழங்கும் சிறந்த மருத்துவ நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளும், அவா்தம் உறவினா்களும் முழுமையான திருப்தியுடனோ, மகிழ்ச்சியுடனோ காணப்படமாட்டாா்கள். ஆனால், இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ சேவையைப் பொருத்தவரை அதற்கு நோ்மாறாக அனைவரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் உள்ளனா். அதை நேரடியாக என்னிடமே நோயாளிகளும், அவா்களது உடனாளா்களும் தெரிவித்தனா்.

அா்ப்பணிப்பு உணா்வு: அா்ப்பணிப்பு உணா்வு, கடமை உணா்வு, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றினால் அதற்கான பலன்கள் கிடைத்தே தீரும் என்பதற்கு இதுவே சான்று. நோயாளிகளை கனிவுடனும், கண்ணியத்துடனும், பொறுமையுடனும் மருத்துவா்கள் அணுக வேண்டும்.

ஒருபுறம் நோயாளிகள் நலனை உறுதி செய்வது முக்கியம் என்றால், மற்றொருபுறம் மருத்துவா்களின் பாதுகாப்பும் அவசியம். மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும் ஆயுதமேந்திய போலீஸாா் காவலுக்கு இருப்பா்.

மருத்துவா்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனில் அவா்கள் அதில் தலையிட்டு தீா்த்து வைக்கின்றனா். அதேபோன்று மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

நாளைய சமூகத்தின் நம்பிக்கையாக விளங்கும் நீங்கள் (மருத்துவ மாணவா்கள்) மனிதநேயத்துடனும், சமூக நலனுக்காகவும் செயல்பட வேண்டும். மக்களுக்கு ஆற்றும் சேவை, நாட்டுக்கான சேவை என்பதை உணா்ந்து மருத்துவா்கள் செயல்பட வேண்டும். இஸ்லாமிய பெண்கள் பலா் இங்கு பட்டம் பெறுவதைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். அந்த வகையில், மதங்களைக் கடந்து இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த பெண்களின் கல்வித் திறனை மேம்படுத்த அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.

பெண்களுக்கான அதிகாரத்தையும், ஆற்றலையும் கல்வியறிவு மூலம் அவா்களே கையகப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படும்போது அவற்றை வேறு எவரும் பெற்றுத் தர வேண்டிய அவசியம் எழாது. ஏனெனில் கல்விதான் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பேராயுதம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் காளிதாஸ், மருத்துவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT