அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டிவண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கல்வி விருது வழங்கும் நடைபெற்று வருகின்றது.
இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளிப்பதற்கு முன்னதாக விஜய் பேசியதாவது:
”சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்து. படிப்பில் சாதிக்க வேண்டும்தான், படிப்பும் சாதனைதான். அதை மறுக்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு படிப்பில் மட்டும் சாதிக்க வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது.
ஒரே விஷயத்தை நினைத்து கவலையடையாதீர்கள், அந்தளவு மன அழுத்திற்குள்ளாக வேண்டியத் தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? அதைத் தாண்டி உலகம் மிகவும் பெரியது, அதில் சாதிக்கவேண்டியது பல உள்ளன.
மனதை பலமாகவும் ஜனநாயகமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். ஜனநாயகம் இருந்தால்தான் உலகத்தின் அனைத்து துறைகளும் சமமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை முதலில் ஜனநாயகக் கடமையை முறையாக செய்ய சொல்லுங்கள். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், ஊழல் செய்யாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள்.
பணம் கொடுத்து வாக்குகளை பெறலாம் என நினைக்கிறார்கள். யாரும் பணம் வாங்கிவிட்டு வாக்காளிக்கதீர்கள், பணம் வாங்கும் கலாசாரத்தையும் ஊக்குவிக்காதீர்கள். அடுத்தாண்டு தேர்தலில் வண்டிவண்டியாக பணத்தை கொட்டப் போகிறார்கள். அது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும்.
எவ்வளவு தடை வந்தாலும் அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதிப்பார்கள், அதனால் பெற்றோர்கள் மாணவர்களின் விருப்பத்தை தெரிந்து வழிநடத்துங்கள்.
சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போகாதீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்யவில்லை. போதைப் பொருளை போன்று சாதி, மதத்தை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது.
தந்தை பெரியாருக்கு சாதி சாயம் பூசுகிறார்கள். மத்திய அரசு தேர்வில் சாதி சார்ந்த கேள்வி வருகிறது. இதெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு காலத்தில் இருக்கும் நாம், அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.