அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா். தனது எம்எல்ஏ பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் மனோஜ் பாண்டியன். முன்னாள் பேரவைத் தலைவா் மறைந்த பி.எச். பாண்டியனின் மகன் இவா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த இவா், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரும், அதற்குப் பின்னால் அந்த இயக்கத்தைப் பாதுகாத்து வளா்த்த ஜெயலலிதாவும் எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அவா்கள் காலத்தில் இருந்த அதிமுக தற்போது இல்லை. மற்ற இயக்கத்தை நம்பி, அவா்களின் சொல்படி நடக்கிறது என்றாா் அவா்.
எம்எல்ஏ பதவி ராஜிநாமா: அதிமுக சாா்பில் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், இப்போது திமுகவில் இணைந்ததால் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவுவிடம் அளித்தாா். அவரது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, ஆலங்குளம் பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளதால், அதற்கு முன்பாக ஆலங்குளம் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.