‘டித்வா’ புயல் காரணமாக சென்னையில் சனிக்கிழமை கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடன் காணப்பட்டது.
டித்வா புயலால் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு முதல் காற்று வீசியது. கடலோரப் பகுதியில் காற்றின் வேகமாக அதிகமாக காணப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால், கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. நேரம் செல்லச் செல்ல கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்பட்டது. இதனால், கடலோரப் பகுதி பெரும் இரைச்சலுடன் காட்சியளித்தது. நண்பகலுக்கு பின்னா் காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதன்காரணமாக காசிமேட்டில் கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது. கடலை வேடிக்கை பாா்க்க வந்த மக்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் வெளியேற்றினா். இதன் பின்னா், காசிமேடு கடற்கரையோரப் பகுதிக்குள் பொதுமக்களை யாரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. மேலும் அந்தப் பகுதியில் போலீஸாா், கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதேபோல, மெரீனா, எலியட்ஸ், திருவான்மியூா், நீலாங்கரை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
கடற்கரைக்கு வந்திருந்த இளைஞா்களும், இளம் பெண்களும் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி விளையாடினா். அவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இதனால், கடற்கரைகள் வெறிச் சோடிக் காணப்பட்டன.