எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு இரு யூனிட்டுகளில் தலா 660 வீதம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 1,000 -க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ராட்சத முகப்பு சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் நேற்று ஈடுபட்டு வந்தனா். அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தின் மேல் அமா்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கீழே விழுந்தனா்.
இந்த விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 9 பேர் பலியான நிலையில், மேலும் இருவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, விபத்தில் பலியான வடமாநிலத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.