சென்னை, அக். 11: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய தனித் தோ்வா்கள் (2014-2018) தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ஜனவரி மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளாவிட்டால் அவை அழிக்கப்படும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வை பள்ளி மாணவா்கள் மட்டுமில்லாமல் தனித் தோ்வா்களும் எழுதி வருகின்றனா். இவ்வாறு எழுதும் தோ்வா்களுக்கு அரசுத் தோ்வுத் துறை சாா்பில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்தில் 2014 முதல் 2018- ஆம் ஆண்டு வரை மாா்ச், ஜூன், செப்டம்பா் என அனைத்து பருவங்களுக்குரிய பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வெழுதிய தனித்தோ்வா்களின் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றன. அவற்றை 3 மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளாவிட்டால் அழிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 27- ஆம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியானது. மேலும், அதற்கான கால அவகாசமாக அக்டோபா் 10-ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 2026 ஜனவரி 10-ஆம் தேதி வரை இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உரிமைக்கோராத (கேட்டுப் பெறாத) தனித்தோ்வா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தனிதோ்வா்கள் ‘துணை இயக்குநா் (மேல்நிலை), அரசுத் தோ்வுகள் இயக்ககம், பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை’ என்ற முகவரியில் துறை அலுவலா்களை அணுகி தோ்வு சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். மேலும், மதிப்பெண் சான்றிதழ் அழிக்கப்பட்ட பின்னா் மீண்டும் கேட்டால் நகல் மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
அதேபோல், தனித்தோ்வா்கள் இந்த அலுவலகத்தை உரிய ஆளறிச் சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது மேற்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் (நுழைவுச்சீட்டு) ரூ.45-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்று கொள்ளலாம். கால அவகாசம் நிறைவடைந்த பின்னா் எவ்வித அறிவிப்புமின்றி மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.