முகப்பு
தமிழ்நாடு

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம் என்று ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

Updated On : 11 செப்டம்பர், 2025 at 7:40 AM
ஒசூரில் மு.க. ஸ்டாலின்
பகிர்:

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

ஒசூரில் இன்று காலை தொடங்கிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணங்களை முடித்துக் கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் திரும்பிய மூன்று நாள்களில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உங்களை சந்தித்திருக்கிறேன்.

இன்று நடைபெறும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகிறது. இதன் மூலம் நமது சாதனைகளை நாமே உடைக்கிறோம்.

8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய ரூ.1060 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஒசூர் திறமையும் புதுமையும் சந்திக்கும் நகரமாக உள்ளது. தமிழகத்தின் வரைபடத்தில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக உள்ளது ஒசூர். வளர்ச்சியைப் பொருத்தவரை, இந்தியாவைக் கடந்து உலக அளவில் தனிக்கவனம் பெறும் நகரமாகவும் ஒசூர் உள்ளது என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.

தமிழகம் தொழில்துறையில் இந்த அளவுக்கு வேகமாக முன்னேறி வருவதற்கு, துடிப்பான, இளமையான தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாதான் காரணம். கடந்த மாதம் தூத்துக்குடியில் புதிய தொழில்நிறுவனத்தைத் தொடங்கி வைத்தேன்.

இன்று மாலை ஒசூரில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பிரிவைத் தொடங்கி வைக்கவிருக்கிறேன். அடுத்தடுத்த மாதங்களுக்கும் இலக்குகள் நிர்ணயித்திருக்கிறேன்.

அமைச்சர் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் மட்டுமல்ல, முதலீட்டாளர்களின் ஆர்வமும்தான், நான் இங்கு வரக் காரணமாக இருந்தது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நாங்கள், இலக்காக நிர்ணயித்தது, வரும் 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்பதுதான்.

மாநிலத்தின் வளர்ச்சியை இவ்வாறு எட்ட வேண்டும் என்றால் தொழில்துறைதான் அடிப்படை. எனவேதான், அதற்கான கட்டமைப்புகளை மிகவும் சிறப்பாக உருவாக்கி அவற்றை மேலும் மேலும் மேம்படுத்தி தொழில் செய்யும் சூழலை வசூப்படுத்தி வருகிறோம்.

இதனால்தான், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ஒசூரில் காவேரி மருத்துவமனை ரூ.500 கோடியில் புதிய மருத்துவமனை அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

summary

Chief Minister M.K. Stalin proudly stated at the Industrial Investors Conference held in Hosur that Tamil Nadu is surpassing the achievements made by Tamil Nadu in the industry.

முழு கட்டுரையைப் படிக்க →