ரூ. 1,000 கூட தராமல் இழுத்தடிப்பதுதான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி
மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி
மகளிர் உரிமைத் தொகை குறித்து முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
Advertisement
Advertisement
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாயகூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுத் திட்டங்கள்
முந்தைய திமுக அரசு கொண்டு வந்த புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களின் பயனாளிகளுக்கு மாதந்தோறும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தற்போது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் இந்த திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் காத்திருக்கும் பயனாளிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அதன்படியே, முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக மாதந்தோறும் 7 ஆம் தேதி வரும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டப் பயனாளிகளுக்கான ரூ. 1,000, இன்று(மே 14) காலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்தார். மேலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000கூட தராமல் தவெக அரசு இழுத்தடிப்பாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
DMK Leader M.K. Stalin questions CM Vijay on magalir urimai thogai scheme
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.