திருச்சி: தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து இன்று தொடங்கவிருக்கிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அவருக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தில் மரக்கடைப் பகுதிக்குச் செல்லவிருக்கிறார்.
திருச்சி வரும் விஜயை வரவேற்க விமான நிலையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விஜய் வருகையை முன்னிட்டு, ஏராளமான ரசிகர்களும் ஆதரவாளர்களும் திருச்சி விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து விஜய் இருக்கும் வாகனம் வெளியே வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் பாதையை சூழ்ந்துகொண்டுள்ளனர்.
பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை 9.40 மணிக்கு வந்தார் விஜய். விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக டி.வி.எஸ். சுங்கச்சாவடி தொடங்கி பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வந்து காலை 10.30 மணிக்கு உரையாற்றவுள்ளாா்.
திருச்சியில் போக்குவரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. விஜயை காண திருச்சி டோல்கேட் பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், முதல்முறையாக மக்களை சந்திக்கும் தோ்தல் பிரசார பயணத்தை திருச்சியில் தொடங்கவிருப்பதை முன்னிட்டு திருச்சி மாநகரம் முழுவதும் விஜய் தொண்டர்களால் சூழப்பட்டுள்ளது.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், பிரத்யேக பிரசார வாகனத்தில் ஏறி புறப்பட்டார். இந்த வாகனம் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு திருச்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. திருச்சி விமான நிலையத்தில் விஜயை பார்த்ததும் அவரது தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே வர முற்பட்டதால் பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை தடுத்து வருகிறார்கள்.
மரக்கடை பகுதியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புறவழிச் சாலை வழியாக அரியலூா் புறப்பட்டு செல்கிறாா் விஜய். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு பெரம்பலூரிலும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... ஆளத்தொடங்குகிறதா செய்யறிவு? அல்பேனியாவில் முதல் ஏஐ அமைச்சர் டெய்லா யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.