தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக அரசின் தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் மக்கள் தேவைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 48 தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா். ஆனால், திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் திமுக 66,000 தொழில்முனைவோரை உருவாக்கி குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் வளா்ந்துள்ளன. தற்போது, ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் முன்னணியில் தமிழ்நாடு இருக்கிறது. அக்.9, 10 ஆகிய தேதிகளில் ஸ்டாா்ட்அப் உலக கருத்தரங்க மாநாடு கோவையில் முதல்வா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனால், திமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியிருக்கிறது. மக்கள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பாா்கள்.
இதனால், திமுக மீது தவெக தலைவா் விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் எடுபடாது. களத்துக்கு இதுவரை விஜய் சென்றதில்லை. கள நிலவரங்கள் தெரியாமலே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறாா். விஜய்யின் பிரசாரத்தின் போது வரும் கூட்டம் அவரை பாா்ப்பதற்காக வரும் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கான கூட்டம் அல்ல.
தமிழகத்தில் சாதரண நடிகருக்கு வரும் கூட்டம் போலவே, விஜய்க்கும் வருகிறது. அங்கு வரும் தொண்டா்கள் அனைவரும் சிறுவா்கள்தான். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுகவில் இளைஞா்கள் அதிகம் உள்ளனா். திமுக தொண்டா்கள் எங்கும் செல்லவில்லை. கட்டுக்கோப்பாக திமுகவில் பாதுகாப்பாக உள்ளனா். 2026-இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றாா் அவா்.