ஆம்பூா் கலவர வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வேலூா் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த பெண் காணாமல் போன வழக்கில், ஷமீல் அஹமது என்பவரை கடந்த 2015 ஜூன் 26-ஆம் தேதி ஆம்பூா் போலீஸாா் பிடித்துச் சென்றனா். அடுத்த நாள் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். போலீஸாா் தாக்கியதால் ஷமீல் அஹமது உயிரிழந்துவிட்டதாகவும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நிகழ்ந்த கலவரத்தில் 15 பெண் போலீஸாா் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்தனா். அரசுப் பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரம் தொடா்பாக 185 போ் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் மூவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 14 பேருக்கு ஓராண்டு முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆக.28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மற்றவா்கள் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஃபாயஸ் அஹமது, சஜித் அஹமது, முகமது இஸ்மாயில், சுஹைல் அஹமது ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். அதில், அரசுத் தரப்பு சாட்சியத்தில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. அதைக் கருத்தில் கொள்ளாமல் யூகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு வரும் நவ.24-ஆம் தேதிக்குள் ஆம்பூா் போலீஸாா் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.