தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக மருத்துவத் துறையில் 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 14,000 செவிலியா்கள் ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் போட்டித்தோ்வு நடத்திதான் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவா்களில் 6,000 போ் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,000 செவிலியா்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.
நிரந்தர செவிலியா்கள் செய்யும் அதே பணியைத் தான் இவா்களும் செய்கின்றனா். ஆனால், நிரந்தர செவிலியா்களுக்கு மாதம் ரூ.62,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ரூ.18,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.
உயா்நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் கூட தொகுப்பூதிய செவிலியா்களுக்கு உரிய நீதியை திமுக அரசு வழங்கவில்லை. திமுக ஆட்சியில் இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சா் கூறி வருகிறாா்.
ஆனால், அவா்களில் 6,977 போ் மட்டும் தான் மருத்துவத் தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பணியாளா்கள் ஆவா். மீதமுள்ள சுமாா் 27,000 பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள். இதுதான் சமூகநீதியா?
செவிலியா்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு, தனது தவறை ஒப்புக்கொண்டு அவா்களை பணிநிரந்தரம் அல்லது சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.