அண்ணா சாலையில் உயர்நிலை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு எஃகு கட்டமைப்பு பணிகளை ஆந்திர மாநிலம், ஹைதராபாத் நகருக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ. நீளத்திற்கு ரூ.621 கோடி மதிப்பீட்டில், உயர்நிலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய நாள் (செப். 23) குஜராத் மாநிலம், வதோதராவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், இன்று (செப். 24) ஆந்திர மாநிலம், ஹைதராபாத் குளோபல் தொழிற்சாலையில், 3,400 டன் எடைகொண்ட முன்வார்க்கப்பட்ட கட்டமைப்புகளின் பற்றவைக்கும் (Welding) பணிகளை நேரில் ஆய்வு செய்து, இப்பணிகள் அனைத்தும் தரத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மேம்பாலத் தூண்கள் (Pier), மேல்தாங்கிகள் (Pier-Cap), உத்திரங்கள் (Girder) போன்ற முக்கியமான கட்டமைப்புகள் அனைத்தும் முன்வார்க்கப்பட்ட (Pre-fabricated) எஃகில் தயாரிக்கப்படுகின்றன என்பதே இந்த கட்டுமானப் பணியின் தனிச் சிறப்பாகும்.
சுமார் 15,000 டன் எடையுள்ள இக்கட்டமைப்புகள் குஜராத் மாநிலம், வதோதரா, ஆந்திர மாநிலம், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்படுகின்றன.
இந்த மேம்பாலப் பணிகள் நிறைவடைந்தவுடன், அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் கணிசமாக குறையும், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வசதிகள் ஏற்படும், இம்மேம்பாலம் சர்வதேச தரத்திற்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப்பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும்.
மக்கள் நலன், பாதுகாப்பு, தரம் ஆகிய இம்மூன்றும் எப்போதும் எங்கள் முதன்மையான நோக்கம் என்று அமைச்சர் எ.வ. வேலு எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் ரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கு.கோ.சத்தியபிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் ரா.சந்திரசேகர், கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.