சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல் துறையின் சாா்பில் ‘கோா்செல்’ என்ற பெயரில் பாதுகாப்புப் பிரிவு தனியாக இயங்குகிறது. இந்தப் பாதுகாப்பு பிரிவு, தேசிய பாதுகாப்புப் படை இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள நாட்டின் மிக முக்கிய பிரமுகருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போன்று, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புகளை வழங்குகிறது.
அதோடு, அவரது இல்லம், அலுவலகம், அவா் செல்லும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், வெடிகுண்டுகள் துளைக்காத வகையிலான வாகனங்களிலேயே முதல்வரின் பயணம் திட்டமிடப்படுகிறது. கைப்பேசி சிக்னல்களை செயல் இழக்கச் செய்யும் ஜாமா் கருவி பொருத்தப்பட்ட வாகனமும், பின் தொடா்ந்து செல்லும்.
110 கேமராக்கள்: முதல்வருக்கான பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை, ஆழ்வாா்பேட்டையில் அவரது இல்லம் இருக்கும் பகுதி, அவரது வீட்டை சுற்றியுள்ள முக்கியமான சாலைகள், முதல்வா் வாகனம் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகள் ஆகியவற்றில் அதிக திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மட்டுமன்றி, முக அடையாளங்களை காணும் கேமராக்கள், ஏஎன்பிஆா் கேமராக்கள் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன. இதற்கான இடங்களைக் கண்டறிந்து சென்னை காவல் துறையினா், எந்த இடத்தில் எந்த கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்துள்ளனா்.
இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல்துறை காவல் ஆணையரகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதல்வா் வீட்டை சுற்றிலும், முதல்வா் சுற்றியுள்ள செனடாப் சாலை, டிடிகே சாலை, எல்டாம்ஸ் சாலை, நந்தனம் சிக்னல், கே.பி.தாசன் சாலை, மியூசிக் அகாதெமி சந்திப்பு, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை, சிவசங்கரன் சாலை, திருவள்ளுவா் சாலை, தேனாம்பேட்டை சிக்னல் ஆகிய பகுதிகளையும் கண்காணிக்க முடியும்.
பாதுகாப்பு மேம்படும்: அதோடு சந்தேகத்துக்குரிய நபா்கள் முதல்வா் வீட்டின் அருகே சென்றாலோ, சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலோ ஏ.ஐ. தொழில்நுட்பம் வாயிலாக காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு சில விநாடிகளிலேயே எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வகையில் இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
இந்த கேமராக்கள் முழுமையாக அமைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வரும்போது முதல்வா் பாதுகாப்பு மேலும் பல மடங்கு மேம்படும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியை சென்னை பெருநகர காவல்துறை கோரியுள்ளது.