கரூா் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழக வரலாற்றிலேயே நடைபெறாத பெரும் துயரம் கரூரில் நடைபெற்றுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 41 போ் உயிரிழந்துள்ளனா். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவா்கள் தங்களுக்கு வருகின்ற கூட்டத்தை ஒழுங்குபடுத்த, தங்கள் இயக்கத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கரூா் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெகதான்.
திட்டமிட்டு தவெகவினா் தமிழக அரசு மீதும், சட்டப்பேரவை உறுப்பினா் மீதும், மறைமுகமாக முதல்வா் மீதும் தாக்குதல்களைத் தொடுப்பது கண்டத்துக்குரியது.
சிபிஐ விசாரணை வந்தால் அவா்கள் நடுநிலையாக அறிக்கை தந்து விடுவாா்களா? சிபிஐ மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறியுள்ளாா். இதைவிட முதல்வா் என்ன செய்ய வேண்டும். இந்தத் துயரத்துக்குப் பொறுப்பு ஏற்க வேண்டியது தவெகதான் என்றாா் அவா்.