முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளதைப் பற்றி...

Updated On : 16 ஏப்ரல் 2026, 3:23 pm IST
ஜனநாயகன்.
பகிர்:

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் ராணுவம் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி, தணிக்கை வாரியம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக படத்துக்கு சான்று வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, படத்துக்கு உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து,வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய பட தயாரிப்பு தரப்பு, தனி நீதிபதி முன் நிலுவையில் இருந்த வழக்கை திரும்பப் பெற்றது.

படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழு ஆய்வில் உள்ள நிலையில், ஜனநாயகன் படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக கசிந்தது. இதையடுத்து, படத்தை இணையதளங்களில் வெளியிடவும், கேபிள் டிவிக்களில் வெளியிடவும் தடை விதிக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் முன்பே படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களிலோ கேபிள் டிவிகளிலோ வெளியிட்டால் அது பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஜனநாயகன் படத்தை இணையதளங்களிலும் கேபிள் டிவிகளிலும் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

summary

The Chennai High Court has issued an interim stay on the release of the film *Jananayagan* on cable TV and websites.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.