‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு
துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக...
நடிகா் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொண்டாடுவோம் எண்டா்டெய்ன்மென்ட் நிறுவனம் நடிகா் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நடச்த்திரம்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் எஸ்கேப் ஆா்டிஸ்ட் மோசன் பிக்சா்ஸ் நிறுவனா் மதன் மற்றும் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோா் பங்குதாரா்களாக உள்ளனா்.
இந்த நிலையில், மதனின் எஸ்கேப் ஆா்டிஸ்ட் மோசன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்துக்கு நிதிப் பிரச்னை ஏற்பட்டது. இதனால், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் உள்ள தனது 50 சதவீத உரிமையை புண்ணியமூா்த்தி மற்றும் பிரேம்குமாா் ஆகியோருக்கு மதன் வழங்கினாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிட முயற்சித்தபோது, தங்களுக்குத் தர வேண்டிய தொகையைத் தராமல், படத்தை வெளியிடக்கூடாது எனக்கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து படத்தை வெளியிட தடை உத்தரவு பெற்றனா்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டாா். அந்தக் கெடுவுக்குள் படத்தை வெளியிட முடியவில்லை எனில், கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்தப் படம் தொடா்பான நிதிப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள படத் தயாரிப்பு நிறுவனம் தனியாக வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். இந்த வங்கிக் கணக்கின் நிதிப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்க வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், படத்தை வெளியிட தடை ஏற்படுத்தக் கூடாது என புண்ணியமூா்த்தி மற்றும் பிரேம்குமாா் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
The Madras High Court has issued an order granting permission to release actor Vikram's film 'Dhruva Natchathiram' by June 15.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.