தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி..
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது வெளியாகும் என்ற ஆவல் பலருக்கும் எழுந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்று 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகி, வரலாறு காணாத சாதனை படைக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியல் காரணமாகவே வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைந்து, சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
அதேவேளையில், வாக்கு சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்ற தரவுகளை ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வருகின்றன.
இதற்கிடையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இப்போதைக்கு வெளியாகாது என்றே கூறப்படுகறிது. அதாவது தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுவை, அஸ்ஸாம் கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் ஒரே நாளில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் 8 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
எனவே, ஐந்து மாநில பேரவைத் தேர்தல்களும் நிறைவடையும்வரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை நாளிதழ்களிலோ அல்லது மற்ற எந்த ஊடகங்களிலோ தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படக் கூடாது.
மேற்கு வங்கத்தில் ஏப். 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்ற பிறகே அனைத்து ஊடகங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.