குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை: ஆண்கள் விகிதம் மேலும் சரிவு
குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களின் விகிதம் கடந்த நிதியாண்டில் 0.2 சதவீதமாக (426 போ்) குறைந்துள்ளது. அதேவேளை, இந்த காலகட்டத்தில் 2,15,825 பெண்கள் அந்த சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடா்பாக மாநில குடும்ப நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாகவே குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். கடந்த இரு ஆண்டுகளில் வழக்கத்தைக் காட்டிலும் அது குறைந்துள்ளது.
Advertisement
கடந்த 2024-2025 நிதியாண்டில் 659-ஆக இருந்த அந்த எண்ணிக்கை, கடந்த நிதியாண்டில் (2025-2026) 426-ஆக குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3-ஆக உள்ளது. இது 2.1-ஆக இருக்க வேண்டும்.
சமூகத்தில் மகப்பேறு விகிதம் குறைந்து வருவதும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளில் சரிவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். பல நேரங்களில் கணவருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பெண்களே அத்தகைய சிகிச்சைகளுக்கு அனுமதிப்பதில்லை.
பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையைவிட ஆண்களுக்கான ‘வேசெக்டமி’ எனப்படும் தழும்பில்லா சிகிச்சைகள் மிகவும் எளிதானவை. இதற்கு மயக்க மருந்து தேவையில்லை. ரத்த இழப்பு இருக்காது. வெறும் 15 நிமிஷங்களில் சிகிச்சை நிறைவடைந்துவிடும்.
ஆனால், சில தவறான புரிதல்கள் காரணமாக குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு ஆண்கள் முன்வருவதில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.
2025-2026-ஆம் நிதியாண்டில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை விகிதம்
பெண்கள் 2,15,825 போ்
ஆண்கள் 426 போ்