முகப்பு
தமிழ்நாடு

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

பேரறிவாளன் வழக்குரைஞராகப் பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On : 30 ஏப்ரல் 2026, 12:54 am IST
வழக்குரைஞர் பேரறிவாளன் - எக்ஸ்
பகிர்:

பேரறிவாளன் வழக்குரைஞராகப் பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன், சட்டப் படிப்பை முடித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி.யும், வழக்குரைஞருமான ஆா்.சுதா கூறியதாவது:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி பேரறிவாளன், வழக்குரைஞராகப் பதிவு செய்த நாள் ஒரு கருப்பு நாள். இதற்காக பாா் கவுன்சில் உறுப்பினா்களைக் கண்டிக்கிறேன். பேரறிவாளனை வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதித்தது தவறான முன்னுதாரணம். இது குறித்து குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பி உள்ளேன். எனவே, பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை திரும்பப் பெற பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

இது குறித்து பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு அளித்த விளக்கம்:

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா் வழக்குரைஞராகப் பதிவு செய்வது இது முதல்முறை அல்லை. ஏற்கெனவே, பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்து வழக்குரைஞராக பலா் பணியாற்றுகின்றனா்.

வழக்குரைஞா்கள் சட்டப் பிரிவுகளின்படி, ஒருவா் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குரைஞராகப் பதிவு செய்யலாம் எனக் கூறுகிறது. பேரறிவாளனின் ஆவணங்கள் பாா் கவுன்சிலின் வழக்குரைஞா் பதிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே வழக்குரைஞராகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டாா். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று கூறினாா்.