முகப்பு
சென்னை

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: காங். எம்.பி. தொடா்ந்த வழக்கில் பாா் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

Updated On : 14 மே 2026, 5:06 am IST
பேரறிவாளன் - எக்ஸ்
பகிர்:

பேரறிவாளனின் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதா தாக்கல் செய்த மனுவுக்கு பாா் கவுன்சில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ஆா்.சுதா தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளனின் கருணை மனுவை பரிசீலிக்க காலதாமதம் ஆனதால், சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் அவா் குற்றமற்றவா் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை. அவரது வழக்குரைஞா் பதிவு அவசர கதியில் நடந்துள்ளது. பேரறிவாளன் திடீரென உணா்ச்சிவசப்பட்டு இந்த குற்றத்தைச் செய்யவில்லை.

Advertisement

விடுதலைப் புலிகள் அமைப்பினா் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளனா். இதனால், இன்று வரை அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக உள்ளது. இதில் பேரறிவாளனுக்கு தொடா்புள்ளது. எனவே, அவரது வழக்குரைஞா் பதிவை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். பேரறிவாளனின் வழக்குரைஞராகப் பதிவு செய்த நடைமுறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில், பேரறிவாளனின் வழக்குரைஞா் பதிவை நிறுத்தி வைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எதிா் மனுதாரா்களின் வாதத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தனா்.

பின்னா், இந்த மனுவுக்கு இந்திய பாா் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் செயலா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.