மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
கண்டாங்கி பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் இன்று (ஏப்.30) அதிகாலை மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்.
கண்டாங்கி பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் இன்று (ஏப்.30) அதிகாலை மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா கடந்த மாதம் ஏப். 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்க அழகர் மலை திருமாலிருஞ்சோலையில் இருந்து கள்ளழகர் நேற்று (ஏப்.29) மாலை 6:15 மணியளவில் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.
Advertisement
Advertisement
நேற்று மாலையில் அழகர் மலையில் கள்ளழகர் புறப்பாடு நடைபெற்றதையொட்டி, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
அழகர் கோயிலில் 18 ஆம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி மற்றும் அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம், சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபம் ஆகியவற்றில் கூடியிருந்த பக்தர்களுக்கு கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா...' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மண்டபங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று அதிகாலை 2 மணியளவில் கடச்சனேந்தல் பகுதியில் எழுந்தருளிய கள்ளழகர், காலை 5.30 மணியளவில் மூன்று மாவடியில் பக்தர்கள் எதிர்கொண்டு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை நகரை வந்தடைந்த கள்ளழகருக்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதன்பிறகு புதூர் மாரியம்மன் திருக்கோவில், ரிசர்வ் லைன் மாரியம்மன் திருக்கோயில், அவுட் போஸ்ட் மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அம்பலகாரர் மண்டபம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றிரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு வருகை தரும் கள்ளழகர், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் அருள்மிகு ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கொள்கிறார்.
அதன்பிறகு மே 1 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் எதிரே அமைந்துள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகையாற்றில் எழுந்தருள வருகைதரும் கள்ளழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு அன்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.