பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்!
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இறங்கியது குறித்து...
மதுரை : பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் இறங்கினார் அழகர், மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டு உடுத்தி வெள்ளிக்கிழமை அதிகாலை வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் மூன்றாம் நாளான புதன்கிழமை மாலை சுந்தரராஜப் பெருமாள் (உத்ஸவர்) கள்ளர் கொண்டை, கையில் வலைத்தடி, இடுப்பில் கட்டாரி தரித்து கள்ளழகர் கோலம் ஏற்று வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக தங்கப் பல்லக்கில் மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரை மூன்றுமாவடி பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புறப்பாடாகிய கள்ளழகர் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி சேவை சாதித்து, வியாழக்கிழமை இரவு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள், திருமஞ்சனத்துக்குப் பிறகு கள்ளழகர் வேடத்தைக் களைந்து, சுந்தரராஜப் பெருமாள் அலங்காரத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வைகைக்குப் புறப்பட்டார்.
இதனிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் சூடிக் களைத்த மாலையை சுந்தரராஜப் பெருமாள் ஏற்கும் ஐதீக நிகழ்வு கோயிலின் உள் பிராகாரத்தில் நடைபெற்றது. இதையடுத்து, திருக்கண் மண்டபங்களில் எழுத்தருளி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தல்லாகுளம் கருப்பண சாமி கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளினார். சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு தங்கக் குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்கு புறப்பட்டார்.
திரியெடுத்து ஆடுவோர், திரியின்றி ஆடுவோர், கள்ளழகர் வேடமேற்றோர் முன்னும், பின்னும் அணிவகுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பக்தர்களின் இடை விடாத பக்தி முழக்கங்களுக்கு இடையே ஆழ்வார்புரம் வைகை ஆற்றங்கரையில் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை சுமார் 5.48 மணிக்கு அழகர் வைகையாற்றறில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது அங்குக் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பி வைகைத் தீர்த்தத்தை வாரித் தெளித்து அழகரை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, வைகையாற்றில் எழுந்தருளிய அழகரை வீரராகவ பெருமாள் எதிர்கொண்டு வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், இந்து சமய அறநிலையத் துறை மண்டகப்படியையும், சந்திப்பு மண்டகப்படியையும் அழகர் வலம் வந்து சந்திப்பு மண்டகப்படியில் எழுந்தருளினார். இதையடுத்து, வீரராகவப் பெருமாளுக்கு அழகரும். அழகருக்கு வீரராகவப் பெருமாளும் பரஸ்பரம் மரியாதை செலுத்தும் ஐதிக வழிபாடுகள் நடைபெற்றன.
இதில், அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், வைகையாற்றிலிருந்து அழகர் புறப்பாடாகி ஆழ்வார்புரம் வழியாக ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் வேடமணிந்து வந்த திரளான பக்தர்கள் அழகரை வரவேற்கும் விதமாகவும், மரபு வழி நிகழ்வுப்படி அவரை ஆற்றுப்படுத்தும் விதமாகவும் தண்ணீரை பீய்ச்சி (துருத்திநீர்) நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
ஏராளமானோர் அழகருக்கு மாலை சாத்தியும், சர்க்கரையில் கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் ராமராயர் மண்டபத்திலிருந்து அழகர் புறப்பட்டு அண்ணாநகர், யானைக்குழாய் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண் மண்டபங் களில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் எழுந்தருளி ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
விழாவில், மதுரை மாநகரக் காவல் ஆணையர் அபிஷேக் திக்ஷீத் தலைமையில் சுமார் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, காலை 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் வைகையாற்றுக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர், வண்டியூர் அனுமன் கோயிலில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். இதையடுத்து, ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு நள்ளிரவு 12 மணி முதல் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் சேவை சாதிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு ராஜ அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லக்கில் புறப்பாடாகிறார். தொடர்ந்து, அழகர், தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகிறார்.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மீண்டும் கள்ளழகர் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் இருப்பிடம் நோக்கி அழகர் மலைக்குப் புறப்பாடாகிறார். வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோயிலை அடைகிறார்.
பசுமையின் வெளிப்பாடு பச்சைப் பட்டு - அழகர் வைகையாற்றில் இறங்கும் போது எந்த நிறத்திலான பட்டு உடுத்தியிருந்தார் என்பது குறித்து மக்களிடம் எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் அழகர் ஆற்றில் இறங்கும்போது உடுத்தியிருக்கும் பட்டுத் துணியின் நிறத்தைப் பொருத்தே அந்த ஆண்டின் நிகழ்வுகள் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இதில், பச்சை நிறம் பசுமையின் வெளிப்பாடாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் அழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கியிருப்பதால், நாட்டில் பசுமை நிறைந்து காணப்படும். வேளாண்மை செழிக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.