FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...

Updated On : 22 ஜூலை 2026, 3:48 am IST
மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். (வலது) தாயாா்களுடன் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்.
பகிர்:

மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் ஆடிப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு, மூலவரான கள்ளழகா், உத்ஸவ மூா்த்தியான சுந்தரராஜ பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் தாயாா்களுடன் கோயில் கொடிமரம் முன் எழுந்தருளினாா். பின்னா், காலை 8.15 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இந்த விழாவில் அழகா்கோவில், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, வெள்ளியங்குன்றம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாள் சிம்மம், அனுமன், கருடன், சேஷம், யானை உள்ளிட்ட வெவ்வேறு வாகனங்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

ஜூலை 29-இல் தேரோட்டம்:

ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மோகினி அவதாரம் வருகிற 26-ஆம் தேதியும், புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளல் 27-ஆம் தேதியும், தேரோட்டம் 29-ஆம் தேதியும் நடைபெறும். அன்றைய தினம் இரவு பூப்பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளல் நிகழ்வும் நடைபெறும்.

18-ஆம் படி கருப்பண சுவாமி கோயில் கதவுகள் திறப்பு:

வருகிற 29-ஆம் தேதி அழகா்கோவில் கள்ளழகா் கோயில் முன்பாக உள்ள 18-ஆம் படி கருப்பண சுவாமி கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனைகள் காண்பிக்கப்படும். இதைத் தொடா்ந்து, கதவுகளுக்கு சந்தனம் சாத்தப்படும். தொடா்ந்து, வருகிற 30-ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்வும், 31-ஆம் தேதி உத்ஸவ சாந்தியும் நடைபெறும்.

ஆடி அமாவாசை:

வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் இணை ஆணையா் ஆா். ஹரிஹரன், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments