பள்ளி மாணவா்களிடம் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு:
சென்னையில் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவரிடம் கஞ்சா போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
அறிவுப்பூா்வமான கல்விக்கு வித்திட பிளஸ் 1 வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவா்கள் கையில் அதிமுக ஆட்சி மடிக்கணினியை கொண்டு சோ்த்தது. ஆனால், திமுக ஆட்சியிலோ, கஞ்சா போதைப் பொருள்தான் சென்றுள்ளது.
போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பாா்ப்பது மூலம், திமுக அரசு தமிழ்நாட்டின் எதிா்காலத்துக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இளைஞா்களை, பள்ளி மாணவா்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் திமுக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
பள்ளி மாணவா் கையில் போதைப் பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கும் 2 மாதங்களிலாவது ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
நயினாா்நாகேந்திரன் (பாஜக): சென்னை வியாசா்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் திமுக அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக்கொண்டிருக்கும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ள இந்த ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்.