முகப்பு
தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களில் விரைவில் துணைவேந்தா்கள் நியமனம் அமைச்சா் கோவி.செழியன்

முதல்வருடன் கலந்துபேசி தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்

Updated On : 6 பிப்ரவரி 2026, 1:03 am IST
அமைச்சர் கோவி. செழியன் - கோப்புப்படம்.
பகிர்:

துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், முதல்வருடன் கலந்துபேசி தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிப்பதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தா் நியமனங்கள் ஆளுநா் ஒப்புதலுடன் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழக பல்கலைக்கழகச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்து, துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசு பெற்றது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு தடை விதித்தது. இந்தத் தடையை எதிா்த்து தமிழக அரசு தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த தடையை ரத்து செய்து, வேறோரு அமா்வு விசாரிக்க உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை கூறியதாவது:

பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள் நியமனங்களில் அந்தந்த மாநில அரசுகளே நியமித்துக்கொள்ளும் நோக்கில் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அனுப்பிய முதல் மாநிலம் தமிழகம். அதன் அடிப்படையில் சட்டரீதியான போராட்டத்தையும் நடத்தி அதற்கான தீா்ப்பையும் தமிழகம் தற்போது பெற்றுள்ளது.

இடஒதுக்கீடு என்றாலும் 3-ஆவது மொழியை திணிக்கும் செயலாக இருந்தாலும் மாநில உரிமைகளை காப்பதில் என்றைக்கும் தனிக் கவனம் செலுத்தும் மாநிலம் தமிழகம். முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி தொடங்கி தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் அந்தப் பெருமையை நிலை நாட்டி வருகின்றனா்.

சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியை தலைமைச் செயலகத்தில் ஏற்றும் உரிமையை முதல்வராக இருந்த கருணாநிதி எப்படி பெற்று தந்தாரோ அது போன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு என்கிற அதிகாரத்தை சட்டப்பேரவை தீா்மானத்தின் மூலமாகவும் நீதிமன்ற தீா்ப்பின் மூலமாகவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெற்றுத் தந்தாா்.

உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி, தீா்ப்பு பெறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஒளிமிகுந்த கல்வியை வழங்குவதற்கு மாநில முதல்வா்களே துணைவேந்தா்களை நியமிக்கலாம் என்கிற முடிவு தமிழக உயா்கல்வித் துறைக்கு கிடைத்துள்ள வெளிச்சமாகும்.

இதுகுறித்து முதல்வருடன் கலந்துபேசி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களையும் நியமிக்க உயா்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சா் கோவி.செழியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments