ஊத்தங்கரை அருகே பேருந்தில் தீ: ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தனியார் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தில் தீப்பற்றி எரிந்து நாசமாகின.
இந்த விபத்தின் போது, தனியார் நிறுவனத்தின் பேருந்தில் இருந்த 23 தொழிலாளர்கள் நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 6.50 மணிக்கு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை கல்லாவியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 51) ஓட்டினார்.
இந்த பேருந்து மிட்டப்பள்ளியில் இருந்து ஷூ கம்பெனி தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு ஊத்தங்கரை நாட்டாண் கொட்டாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் முந்த முயன்றது.
அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, பேருந்து மீதும் தீ பரவி மளமளவென எரிந்துள்ளது.
உடனடியாக பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளனர். தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் தனியார் நிறுவனப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் தீக்கிரையாகின.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதைகள் திருப்பப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊத்தங்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.